Sunday, July 8, 2012

நேரமில்லை…


நேரமில்லை…

உள்ளங்கை ரேகையாய்
உயிர்விடும் மூச்சுவரை
உதட்டோடு ஒட்டி உறவாடும்
உதவாக்கரைப் பேச்சு...



வாழ்வின் நெடுந்தூரப் பயணத்தில்
அடிக்கடி சாக்குபோக்குச் சொல்ல
நீக்குப் போக்காய்
நா வழியே வந்துவிழும்
த்தூ..வார்த்தை நேரமில்லை...



நேரமில்லை என்றுச் சொல்லி.
உற்றநண்பன்,உறவு,உடைமையென
பலதும் இழந்தவர் பலபேர்...
சொல்லில் வாய்மையைவிட
பொய்மையே அதிகம்..



தோழனே நீ!
இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும்
மனக்குதிரையை ஓட்டாமல்
நிகழ்காலத்தில் பொருந்தி இருந்தால்,
காலம் உன் கட்டுக்குள் இருக்கும்
அப்போது உன் வெற்றியென்பது
மேகத்தால் மறைக்கமுடியாத சூரியன்
காகிதத்தால் மூடமுடியாத நெருப்பு...



தோழனே!
உயிரோடு இருப்பதல்ல
வாழ்க்கை..
உயிர்ப்போடு இருப்பதுவே
வாழ்க்கை...





பயணம்..

பயணம்..



நம்

பயணம் மற்றவர்களுக்காக

இயங்குவதாகவும் இருக்கட்டும்..



சகமனிதன் அற்றப் பயணம்

ஊன்றுகோல் அற்றச் சேற்றுப்பயணம்..

காதல்,கருணை அற்றப் பயணம்

காதற்ற ஊசி...



எதிர்காலம் நோக்கியப் பயணத்தில்

புதிய ஊருக்குச் செல்லும்

விழிப்புணர்வோடு...

எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதுவே

எதார்த்த நிதர்சனம்..



இலக்கற்றப் பயணம் எதுவாயினும்

அது இலவுக்காத்தக் கிளி...

தூங்கிக்கொண்டே தொடுவானத்தை

தொடநினைப்பது நிசத்தை நிசமாக்காது...



நம் வாழ்க்கைப் பயணமென்பது

நாம் இல்லாதபோதும்

நம் இருப்பை உலகில் விட்டுச்செல்லட்டும்

எச்சமாக இல்லாமல் மிச்சமாய்...

முளையடித்து கட்டியிருந்தும்
புல்லைவிடுத்து பயிரைமேய எக்குகிறது
மனமெனும் மாடு...


விருது..

விருது..

இப்போது
ஆயிரமாயிரம் விருதுகள் வாங்கலாம்
இறந்தபின்னும் இருப்பவர் மனதில்
இறவாமல் வாழ்வதே விருது....

இயலாது இறைநிலை என்றாலும்
இயன்றவரை மிருகநிலைக்குச் செல்லாமல்
இதயமுள்ள மனிதரென
மாநிலத்தார் பாராட்ட வாழ்வதே
மானிடப்பண்புக்கு மகத்தான விருது...

இல்லாதவர்களுக்கு இயன்றதைக் கொடுக்க
இதயம் நெகிழ அவர்
இன்சொல் சொல்வாரே அது
இறைதரும் வரத்தைவிட
இன்னுமொருபடி உயரிய விருது...


விருதுகள் மனிதனை ஊக்குவிக்கும்
உற்சாக சக்திதான்-அதற்காக
விருதுகளை தேடிப்பிடித்துப் பறிக்காமல்
கடமைகளைச் செவ்வனே செய்ய
கனிந்து தானே கையில்விழும்
கனியென விருது...