Sunday, July 8, 2012

நேரமில்லை…


நேரமில்லை…

உள்ளங்கை ரேகையாய்
உயிர்விடும் மூச்சுவரை
உதட்டோடு ஒட்டி உறவாடும்
உதவாக்கரைப் பேச்சு...



வாழ்வின் நெடுந்தூரப் பயணத்தில்
அடிக்கடி சாக்குபோக்குச் சொல்ல
நீக்குப் போக்காய்
நா வழியே வந்துவிழும்
த்தூ..வார்த்தை நேரமில்லை...



நேரமில்லை என்றுச் சொல்லி.
உற்றநண்பன்,உறவு,உடைமையென
பலதும் இழந்தவர் பலபேர்...
சொல்லில் வாய்மையைவிட
பொய்மையே அதிகம்..



தோழனே நீ!
இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும்
மனக்குதிரையை ஓட்டாமல்
நிகழ்காலத்தில் பொருந்தி இருந்தால்,
காலம் உன் கட்டுக்குள் இருக்கும்
அப்போது உன் வெற்றியென்பது
மேகத்தால் மறைக்கமுடியாத சூரியன்
காகிதத்தால் மூடமுடியாத நெருப்பு...



தோழனே!
உயிரோடு இருப்பதல்ல
வாழ்க்கை..
உயிர்ப்போடு இருப்பதுவே
வாழ்க்கை...





பயணம்..

பயணம்..



நம்

பயணம் மற்றவர்களுக்காக

இயங்குவதாகவும் இருக்கட்டும்..



சகமனிதன் அற்றப் பயணம்

ஊன்றுகோல் அற்றச் சேற்றுப்பயணம்..

காதல்,கருணை அற்றப் பயணம்

காதற்ற ஊசி...



எதிர்காலம் நோக்கியப் பயணத்தில்

புதிய ஊருக்குச் செல்லும்

விழிப்புணர்வோடு...

எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதுவே

எதார்த்த நிதர்சனம்..



இலக்கற்றப் பயணம் எதுவாயினும்

அது இலவுக்காத்தக் கிளி...

தூங்கிக்கொண்டே தொடுவானத்தை

தொடநினைப்பது நிசத்தை நிசமாக்காது...



நம் வாழ்க்கைப் பயணமென்பது

நாம் இல்லாதபோதும்

நம் இருப்பை உலகில் விட்டுச்செல்லட்டும்

எச்சமாக இல்லாமல் மிச்சமாய்...

முளையடித்து கட்டியிருந்தும்
புல்லைவிடுத்து பயிரைமேய எக்குகிறது
மனமெனும் மாடு...


விருது..

விருது..

இப்போது
ஆயிரமாயிரம் விருதுகள் வாங்கலாம்
இறந்தபின்னும் இருப்பவர் மனதில்
இறவாமல் வாழ்வதே விருது....

இயலாது இறைநிலை என்றாலும்
இயன்றவரை மிருகநிலைக்குச் செல்லாமல்
இதயமுள்ள மனிதரென
மாநிலத்தார் பாராட்ட வாழ்வதே
மானிடப்பண்புக்கு மகத்தான விருது...

இல்லாதவர்களுக்கு இயன்றதைக் கொடுக்க
இதயம் நெகிழ அவர்
இன்சொல் சொல்வாரே அது
இறைதரும் வரத்தைவிட
இன்னுமொருபடி உயரிய விருது...


விருதுகள் மனிதனை ஊக்குவிக்கும்
உற்சாக சக்திதான்-அதற்காக
விருதுகளை தேடிப்பிடித்துப் பறிக்காமல்
கடமைகளைச் செவ்வனே செய்ய
கனிந்து தானே கையில்விழும்
கனியென விருது...


Sunday, January 1, 2012

வந்தது முதல் சென்றது வரை....

ஆணும் பெண்ணும்                      
அரசும் வேம்புமாகி,
உணர்ச்சியால் உருவான
பனித்துளியில் சிறு துளி
பாத்திரத்தில் தங்கி
ஒன்பது மாத்த்தில்
ஒவ்வொரு அங்கமேற்றுப்
பத்தாவது மாதத்தில் முழுமை பெற்று
மடியில் கிடந்தேன்.

அழும் என்னை
ஆரத்தழுவி முகர்ந்து
அமுதை ஊட்டி
ஓரிரு வருடங்களில்
அவளிடமிருந்து பிரித்துச்
சோறு ஊட்டி
கதை பல சொல்லி சுகமூட்டி
அறிவு ஊட்ட
பள்ளியறையில் உதித்த என்னை
பள்ளியில் சேர்த்துத்
தேர்ச்சி பெற்ற என்னை
வளம் நாடி வேலையில் சேர்த்துத்
தனித்த என்னை தந்தையாக்க
என்னுடன் தாரத்தைத் சேர்த்துப்
பெருமூச்சு விட்டனர்.

மானோடு மணக்கோலம் பூண்டு
அவள் தோளோடு விளையாடி
இல்லறத்தை நல்லறமாக நட்த்தி
அவள் கூட்டில் குஞ்சு பொரித்தேன்.
நான் வந்த வழியே என் மகனும் வந்தான்.
நாளும் சோப்பாக்க் கரைய
கருப்பும் நரையானது
மகனுக்கு குடும்பம் அமைத்து
நானும் பெருமூச்சு விட்டேன்...

குமரியை பிடித்த கரம்
கோலை பிடித்த்து
மரமாக வளைந்து
மண்ணை பார்த்தேன்
என் நிழலுக்கும்
கூன் விழுந்தது…

இரவில் தூக்கம்
இருமலாக இருந்தது
துயில்பவர் என்னை
சனியன் என்றனர்.
காடு அழைப்பதை
கட்டிலிலிருந்து பார்த்தேன்
கயிறு போட காலன் வரவில்லை
வரும் வழியில்
டிராபிக் ஜாம் போலும்…

காலம் கடந்து காலன் வந்தான்
ஒன்பது ஓட்டை வழியே
எவ்வழி போனேன் என்று
எனக்கே தெரியவில்லை…

திறந்த கண்னை
பிள்ளை மூடினான்
சுற்றங்கள் சூழ்ந்தன
அடித்து புலம்பினாள்
என் அடியாள்
ஐயோ !
இனி எனக்கு யாரென்று…


நாற்றம் கொண்ட என் உடலுக்கு
நறுமணம் ஊட்டி
சுடலைக்கு செல்லும் முன்
நீருற்றி மாலையிட்டு
மயானம் நோக்கி
மலர் படுக்கையில் படுக்கவைத்து
மூன்று கால்களை நான்காக்கி
பறை கொட்டி பாடை தூக்கினர்...

நெய்ப் பந்தம் பிடித்த என் பேரன்
நின்று கொண்டே அழுதான்
ஏன் அழுகின்றோம் என்று தெரியாமல்.
மருமகள் மகிழ்ச்சி கொண்டாள்
இரவில் இனி இருமல் இல்லையென்று.
கடன் வாங்கியவன்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்
கடன் தீர்ந்தது என்று
எல்லோரையும் சுற்றி பார்த்தேன்
நண்பர்களைத்தவிர
எனக்காக யாரும் அழவில்லை
அவரவர் அவரவர்களுக்காக
அழுது கொண்டு இருந்தனர்...

பெரு உருவமாகிய பனித்துளியொன்று
பிடி சாம்பலானதை
நான் பார்த்தேன்
வெட்டியான் பார்த்தான்
மற்றவர் பார்க்கவில்லை
“கண்டவர் சொன்னதில்லை
சொன்னவர் கண்டதில்லை”.
















































































Sunday, March 20, 2011

கற்றுத்தரும் காடு..


தோழனே!..
மனிதனுக்கு பத்து விரல்
மண்ணுக்குப் பசசை விரல்
காடு...

வெப்பமண்டலக்காடு,ஊசியிலைக்காடு
சதுப்பு நிலக்காடு,மழைக்காடு
இப்படி பலமுகம்,நிறம்,குணம்...

உலகில் மூன்றில் இரண்டுபங்கு
உயிரினமும்,தாவரமும்
உறங்கி விழித்திடவும்
ஒப்பில்லா மூலிகைகளையும் தரும்
மழைக் காடு...

அலைகளை அதன்வழியில் தடுத்து
அதன் ஆட்டம் குறைத்து
சுனாமியை சுருக்குப் பையில்
போட்டுக் கொள்ளும்
அலையாத்திக் காடு...

CO2 வைக் உட்கொண்டு
உயிர்காற்று O2 வை உலகுக்களித்து
இலை, பூ, காய், கனியென
வேர்கூட மூலிகையாய் தந்து
உச்சிமுதல் உள்ளங்கால்வரை
பட்டாலும் பயன்தரும் மரங்களை
உடனே வெட்டி வீழ்த்திவிடுகின்றோம்
மனிதனாய் எண்ணி...

இந்த ஒருசெல் உயிரினம்
உலகில் இல்லை என்றால்
பலசெல் உயிரின்ங்கள் எல்லாம்
செல்லாக் காசு...

நீர் உயரமே! மலர் உயரம்...
காட்டின் உயரமே! மனித வளம்...