ஆணும் பெண்ணும் அரசும் வேம்புமாகி, உணர்ச்சியால் உருவான பனித்துளியில் சிறு துளி பாத்திரத்தில் தங்கி ஒன்பது மாத்த்தில் ஒவ்வொரு அங்கமேற்றுப் பத்தாவது மாதத்தில் முழுமை பெற்று மடியில் கிடந்தேன்.
அழும் என்னை ஆரத்தழுவி முகர்ந்து அமுதை ஊட்டி ஓரிரு வருடங்களில் அவளிடமிருந்து பிரித்துச் சோறு ஊட்டி கதை பல சொல்லி சுகமூட்டி அறிவு ஊட்ட பள்ளியறையில் உதித்த என்னை பள்ளியில் சேர்த்துத் தேர்ச்சி பெற்ற என்னை வளம் நாடி வேலையில் சேர்த்துத் தனித்த என்னை தந்தையாக்க என்னுடன் தாரத்தைத் சேர்த்துப் பெருமூச்சு விட்டனர்.
மானோடு மணக்கோலம் பூண்டு அவள் தோளோடு விளையாடி இல்லறத்தை நல்லறமாக நட்த்தி அவள் கூட்டில் குஞ்சு பொரித்தேன். நான் வந்த வழியே என் மகனும் வந்தான். நாளும் சோப்பாக்க் கரைய கருப்பும் நரையானது மகனுக்கு குடும்பம் அமைத்து நானும் பெருமூச்சு விட்டேன்...
குமரியை பிடித்த கரம் கோலை பிடித்த்து மரமாக வளைந்து மண்ணை பார்த்தேன் என் நிழலுக்கும் கூன் விழுந்தது…
இரவில் தூக்கம் இருமலாக இருந்தது துயில்பவர் என்னை சனியன் என்றனர். காடு அழைப்பதை கட்டிலிலிருந்து பார்த்தேன் கயிறு போட காலன் வரவில்லை வரும் வழியில் டிராபிக் ஜாம் போலும்…
காலம் கடந்து காலன் வந்தான் ஒன்பது ஓட்டை வழியே எவ்வழி போனேன் என்று எனக்கே தெரியவில்லை…
திறந்த கண்னை பிள்ளை மூடினான் சுற்றங்கள் சூழ்ந்தன அடித்து புலம்பினாள் என் அடியாள் ஐயோ ! இனி எனக்கு யாரென்று…
நாற்றம் கொண்ட என் உடலுக்கு நறுமணம் ஊட்டி சுடலைக்கு செல்லும் முன் நீருற்றி மாலையிட்டு மயானம் நோக்கி மலர் படுக்கையில் படுக்கவைத்து மூன்று கால்களை நான்காக்கி பறை கொட்டி பாடை தூக்கினர்...
நெய்ப் பந்தம் பிடித்த என் பேரன் நின்று கொண்டே அழுதான் ஏன் அழுகின்றோம் என்று தெரியாமல். மருமகள் மகிழ்ச்சி கொண்டாள் இரவில் இனி இருமல் இல்லையென்று. கடன் வாங்கியவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான் கடன் தீர்ந்தது என்று எல்லோரையும் சுற்றி பார்த்தேன் நண்பர்களைத்தவிர எனக்காக யாரும் அழவில்லை அவரவர் அவரவர்களுக்காக அழுது கொண்டு இருந்தனர்...
பெரு உருவமாகிய பனித்துளியொன்று பிடி சாம்பலானதை நான் பார்த்தேன் வெட்டியான் பார்த்தான் மற்றவர் பார்க்கவில்லை “கண்டவர் சொன்னதில்லை சொன்னவர் கண்டதில்லை”.