Sunday, March 20, 2011

கற்றுத்தரும் காடு..


தோழனே!..
மனிதனுக்கு பத்து விரல்
மண்ணுக்குப் பசசை விரல்
காடு...

வெப்பமண்டலக்காடு,ஊசியிலைக்காடு
சதுப்பு நிலக்காடு,மழைக்காடு
இப்படி பலமுகம்,நிறம்,குணம்...

உலகில் மூன்றில் இரண்டுபங்கு
உயிரினமும்,தாவரமும்
உறங்கி விழித்திடவும்
ஒப்பில்லா மூலிகைகளையும் தரும்
மழைக் காடு...

அலைகளை அதன்வழியில் தடுத்து
அதன் ஆட்டம் குறைத்து
சுனாமியை சுருக்குப் பையில்
போட்டுக் கொள்ளும்
அலையாத்திக் காடு...

CO2 வைக் உட்கொண்டு
உயிர்காற்று O2 வை உலகுக்களித்து
இலை, பூ, காய், கனியென
வேர்கூட மூலிகையாய் தந்து
உச்சிமுதல் உள்ளங்கால்வரை
பட்டாலும் பயன்தரும் மரங்களை
உடனே வெட்டி வீழ்த்திவிடுகின்றோம்
மனிதனாய் எண்ணி...

இந்த ஒருசெல் உயிரினம்
உலகில் இல்லை என்றால்
பலசெல் உயிரின்ங்கள் எல்லாம்
செல்லாக் காசு...

நீர் உயரமே! மலர் உயரம்...
காட்டின் உயரமே! மனித வளம்...

சின்ன சின்ன ஆசை..


ஊர் இல்லா ஆற்றங்கரையில்
உன் காலடித் தடம்பார்த்து
நடக்க வேண்டும்....

நான் போட்டிருக்கும் சட்டையில்
நீ பட்டன் கட்ட
முன் நெற்றியில்
முத்தமிட வேண்டும்..

ஒரு மழை நாளில்
நீ முந்தானைக் குடைப்பிடிக்க
இடைப்பிடித்து நடக்க வேண்டும்..

நீ கண்ணயர்ந்து
தூங்கும்போது
முகம்பார்த்து
ரசிக்கவேண்டும்....

நீ விரலால் தலைக்கோத
வாழ்க்கை நிகழ்வுகளை
மடியில் கிடந்து
பகிர்ந்து கொள்ளவேண்டும்...

நீ மகிழ்ந்து இருக்கும்
கணங்களில்..
பொய்க் கோபமூட்டி
சிணுங்கவைத்து
ச்மாதானம் செய்ய வேண்டும்...

உன்னில் நானும்
என்னில் நீயும்
இறந்த பின்னும்
இருக்க வேண்டும்...

Friday, March 11, 2011

அன்னிய தேசத்து அஞ்சல்..


கண்ணம்மா!..
கவிதை எழுத நினைத்தால்
சிந்தனையாவும் நீ இருப்பதால்
காகிதவரிகளில் உன் பெயரையே
பேனா குஞ்சு பொரிக்கிறது...

வசதிகள் ஏராளம் என்றாலும்
நீ இல்லாதது வசந்தகாலமற்ற
வருடமாகவே உள்ளது..
வேலையும் வெய்யிலும்
உடலைக் கூறுபோட
உனக்காக என்று நினைக்க
உள்ளத்தில் உற்சாகம் பொங்குகிறது..

மாதம்தோரும் வரும்
என் கடிதம் படிக்க
மாதப் பத்திரிக்கை படிப்பதை
தள்ளிவைத்தாயா!!!
நான் கொடுத்து வைத்தவன்..
இப்போதெல்லாம் ரொம்ப சிக்கனம்
முதல் இரவு முத்தத்தையே
கைபேசியில் செலவு செய்கிறேன்..

நான் உன்னை
க்ட்டிலில் கட்டியதால்
தொட்டில் கட்டினாயே
பிள்ளை எப்படி உள்ளான்
அவன் வந்தபோது
நான் வந்தது..

என் போட்டோ பார்த்து
அப்பா என்கிறானா?..
அங்கிள் என்கிறானா?
அப்பா என்றி நீ
படம் பார்த்துச் சொல்லித்தர
அவனுக்கு நானும் ஒரு பாடமா?...

அறிவோடு அன்பையும் ஊட்டு
அன்பில்லா பலம்
அழிவைத்தான் தரும்...
சரி.."கார்"வந்துவிட்டது
கடித்த்தை முடிக்கிறேன்
முத்தங்களுடன்..

பகலில் தோன்றிய நிலவு.....


உலகக் கட்டிட சிகரங்களின்
தலைக்குப் பின்னால்
மறைந்தும், ஒளிந்தும் கிடப்பது
பகல் நிலவு மட்டிமல்ல
பெளர்ணமியும்தான்...

உப்புநீரை வலிந்தெடுத்து
உயிர் தண்ணீர்தரும் வானம்போல்
வெப்பக் கதிர்களை உள்வாங்கி
குளிர்ந்த ஒளிக்கற்றைகளை உலகுக்களிக்கும்
இயற்கையின் குளிர்சாதனமே...
இயற்கை புவிக்களித்த சீதனமே...

தேய்வதும்,வளர்வதுமாய்
வாழ்வியல் தத்துவத்தை நமக்களித்து
வெண்விதவைக் கோலம்பூண்டு
கவனிப்பாரற்று
வானவீதியில் உலாவரும்
பகல்நிலாவாய் உன்னை
பார்க்கும்போது எல்லாம்
உள்ளம் பதைபதைக்கும்
உலகில் இழந்தவர்களுக்கும் இதேநிலைதான்....

இயற்கைத்தாயின் மங்களப் பொட்டே
மிதக்கும் வெள்ளித் தட்டே

உள்ளத்தைப் பார்பதைவிட
உள்ளதைப் பார்பவரே
உலகில் அதிகம்
நாங்கள் அப்படிதான்...

ஆமாம் வடைசுடும் பாட்டியின்
வியாபாரம் எப்படி ???..
வந்துபோகும் விண்கலமனிதர்கள்
கடன்சொல்லாமல் திரும்புகின்றனரா..
"நீல் ஆம்ஸ்ரோங்" காலடித்தடத்தை
பாதுகாப்பாய் வை-நாங்கள்
பழமைக்கதை பேச உதவும்
கால காலத்துக்கும்...

என்னருகில் நீ இருந்தால்..


நீண்டகாலமாய்
வந்துபோகும் வானவில்லுக்கு
உன் இதழ் சிகப்பையிட்டு
மெல்ல மெருகு ஏற்றுவேன்..

பனி உருகும் அண்டார்டிக்காவில்
உன் பார்வைக் குளுமையைப் பரப்பி
உலகை உள்வாங்கும் கடலின்
களவானித்தனத்தை தடுப்பேன்..

பாசாங்கு இல்லாத
இதமான உன் பக்குவப்பேச்சை
இயற்கையோடு பகிர்ந்துகொண்டு
இடர்யில்லாமல் இயங்கச்சொல்வேன்...

நீ தரும் முத்தத்தின் ஈரத்தை
மொத்தமாக சேகரித்து
ஓசோனில் தெள்ளத் தெளித்து
சுத்தப்படுத்தி சுகாதாரமாக்குவேன்...

கன்னியாக்குமரிமுதல் காஷ்மீர்வரை
மனிதர்களிடம் கலந்துபேசி
கங்கையையும், காவேரியையும்
கருத்தொற்றுமையால் இணைத்து
சொல்லோடு செயலும் ஆற்றி
இனிய இந்தியாவை வல்லரசாக்குவேன்...

சகியே!..
என்னருகில் நீ இருந்தால்....

மனம் ஒரு குரங்கு...


மனிதன்னா
அவன் ஆறறிவு படைத்தவன்
என்பதெல்லாம் ஆர்ப்பாட்டம்..

சகமனிதனின் வலி உணராமல்
உணர எத்தனிக்காமல்-அவன்
உடமையை,உள்ளத்தை,உயிரை
எதையுமே பிய்த்துதெரிந்துவிடுகிறான்
மனிதமில்லாமல்...

சகமனிதன் துன்பம்கண்டு
வள்ளலாராய் மனம்கசியாமல்
மனக்கிளையை குதுகுலமாய் ஆட்டி
விகாரமாய் அகப்பல்காட்டி விலங்காய்..

அதேசமயம்
முகத்தில் வருத்தம் காட்டும்
முகமூடி மனிதனாய்....
ஓடும் மனம்
நின்றால் மனிதன்...
அங்குமிங்கும் ஓட
மனம் குரங்குமட்டுமல்ல....
பலம்வாய்ந்த
பலே விலங்கு....

காத்திரு.....


உன்னை சிதைத்தால்
உன்னில் நான் இருப்பதால்
நானும் சிதைவேன்....

உன் விழிப்பார்வையை பிடித்துக்கொண்டு
இருவரும் வாழ்க்கைப் பாதைநெடுகிலும்
பயணிக்கவே....
உன்னைப் பின்தொடர்ந்தேன்...

உயிர் உடலைவிட்டால் என்னவாகும்
உன்னைக் கைகழுவினால்
உன்னை அல்ல என்னை
இழப்பேன்.....

என் உள்ளத்தில் நீயிருக்க
நீ மனம்கலங்கி கண்கலங்கினால்
அது கண்ணீர் அல்ல
எனது உதிரம்...

வரமாட்டேன் என்று அல்ல
வருவேன் எனக்காத்திரு
நம்பிக்கையே வாழ்க்கை....

இனியவளே!..
இணைவோம்
இறையினும் இனிதே வாழ்வோம்...

செந்தமிழ் வாழ்கிற தீவு!.....


அழகிய தீவே!
உழைப்பில் பழகிய தீவே!
பிழைகள் விலகிய தீவே!
அன்பில் இளகிய தீவே!
நீ வந்தாரை வாழவைக்கும் 
வளம் பாயும் ஜீவநதி-உன் 
பாய்ச்சலின் விளைச்சலால் 
அமோக அறுவடை ஆயின 
அநேக தேசங்களில்...!

அண்ணா எமக்குக் கற்பித்ததை 
அலட்சியப்படுத்திவிட்டு 
வாழ்ந்திருந்த எமக்கு
அனுபவ ரீதியாக நீதான் 
கற்பித்தாய் அந்த
கடமை, கண்ணியம், கட்டுப்பாடென்ற
காஞ்சிபுர மந்திரத்தை!..

உழைப்பால் உயர்ந்த 
உன்னதமே-எங்கள்
உழைப்பின் உன்னதத்தையும் 
உணர்ந்தாய்-எமக்கும் 
உணர்த்தினாய்...

அடித்தட்டு மக்களின் 
அன்பிற்கும் -அவர்தம் 
தேவையறிந்து செய்யும் 
சேவைகளுக்கும் அரசியலில்
உலகுக்கே பாடம் நடத்தும் 
உரிமையும் தகுதியும்
உனக்கே உண்டென்பேன்..

இந்த
தீவைச்செதுக்கிய லீஎன்ற 
மாமனிதரின் 
வார்த்தைகள் ஒவ்வொன்றும் 
மந்திரங்களாயின-நாட்டை
மாற்றிக்காட்ட!
எளிமைக்கும் இனிமைக்கும்
இன்னொரு விளக்கமான 
அதிபர் நாதன் என்ற
அதிசய அதிபரின் ஆளுமையை
அடைந்ததே இந்நாட்டின்
அரும்பெரும் பேரேன்பேன்!

நீராதாரமின்றியே நீர் வளம்...
இயற்கைத்தாயே அளித்த வரமாய்
பசுமை வளம்...
மருத்துவமும் சுகாதாரமும் 
வானளாவ விரிந்ததால் காற்றுத்தூய்மை.....
வரம் போல மழைபெய்யும் நீர்வளம்  ... என 
பஞ்சபூதங்கள்கூட பாசமாய்
பணிவிடை செய்யும் இந்த
தேசத்தின் தேவையறிந்து...! 

எத்தனை இனங்களும் 
எத்தனை மொழிகளும் இருந்தாலும்
அத்தனை இனங்களையும்
நரம்போடு தசையாய் பின்னிப்பிணைந்து 
ஒன்றிக்கலந்துப்  போட்டது
ஒற்றுமையென்ற உயிர் மந்திரம்..!

உயர் மந்திரத்தில் மயங்கியும் 
நாட்டின் வனப்பில் கிறங்கியும்
தமிழ் காக்கும் சிங்கைத் 
தீவின் சிறப்பெண்ணி
தலை வணக்கம் செய்கிறேன் 
நாட்டின் நாற்பத்தைந்தாவது 
நல் பிறந்தநாள் திருவிழாவில்... !

வாழ்க,வளர்க நம்சிங்கப்பூர்!
வாழ்வோம்,வளர்வோம் 
நாமும்...

தாஜ்மகால்..


தாஜ்மகால்!இது
கல்லில் கட்டப்பட்டது அல்ல
உயிர்ச் செல்லில் கட்டப்பட்ட
காதால் கோட்டை..

மேகங்கள் கட்டும்
கற்பனை உருவம் அல்ல
காலத்தால் அழியாத
காதல் சின்னம்..

சகோதரி மும்தாஜ்!
நீ ஷாஜகானுக்கு
அன்பாய்,ஆசையாய்
அதிசயமாய்ப்பட்டதால்
ஆழ்ந்து உறங்கும்
உன் அறையும் இன்று
உலக அதிசயமாய்...

அழகியல் மன்னனே!..
அடையாளம் தெரியாத காதலுக்கு
மும்தாஜ் மூலம்
முகவரி தந்தாய்
இன்று கல்லறையும்
காதல் கோவிலாய்...

யமுனை ஆற்றின்
மின்னும் மணற்பரப்பின் கரையில்
பளபளக்கும் பளிங்கு மொட்டு
அவளுக்காக அவன் கட்டியது
அவனுக்குமாய் இன்று
இருவர் வாழும் ஆலயம்...
 
(தாஜ்மகாலுக்கு நாங்கள் 1999-ல் சென்றபோது
கட்டியக் கவிதை இது....

பயணங்கள் முடிவதில்லை..


அவள் மனசும்
இவன் மனசும்
இடமாறிப் பயணம்
"காதல்"..

ஓட்டை விட்டு
குஞ்சுப் பயணம்
"பிறப்பு"..

உடல் கூட்டை விட்டு
உயிர் பயணம்
"இறப்பு"..

கிழக்கு ஆதவன்
மேற்கு நோக்கிப் பயணம்
"நாள்"..

புவி நோக்கி
கார்மேகம் பயணம்
"மழை"..

மண்ணைவிட்டு
விண்ணை நோக்கியப் பயணம்
"விண்ணியல்"..

இடம்விட்டு
இடம் பயணம்
"இயக்கம்"...

மண்ணை துளைத்தும்
விண்ணை துளைத்தும்
தன் பயணம் அறியாத
பொற்கால மனிதனின்
பயணங்கள் முடிவதில்லை..
சனியன்று(03-07-2010)சிங்கப்பூர் கவிச் சோலையில் நடந்த கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்றது..

இராவணன்...

இதிகாசத்திலும் ,இன்றும்
இராவணன்(கள்) நேராய் நெஞ்சுநிமிர்த்தி
வஞ்சனையில்லாமல் எதையும் எதிர்கொள்ள...

இராமன்(கள்)
மறைந்து கொல்வதும்,மறைத்து வெல்வதும்
இன்றும் தொடர...

இராமன்மீது
ஏன் இந்தக் காதல்?..
மக்களுக்கு இராமன் மட்டும்
எப்படி தெய்வம் ஆனான்?....

மனித மனமும் இராமனோ?...

குற்றவாளி...

ஆசையை அழிக்காமல் மீசையை மழித்து
புத்தனாகப்பேசும் பதர்களுக்கு
பக்தனாகப்போகும் பண்பை
சுத்தமாகக் கழுவியெறிந்தால்
சன்னலை திறக்கவேண்டாம்
மனக்கதவைத் திறக்க இறைவனே வருவான்....

அவர்சரியில்லை இவர்சரியில்லை
புறம்பேசாமல் புன்னகைப் பூத்து
உள்ளே உள்ளேப் பார்க்க
நாமும்கூட குற்றவாளி....

தனிமனித மன ஒழுக்கம்
தரணியெங்கும் மேன்பட்டால்
விலங்கு மனம் ஒடுங்கி
மனிதம் தழைக்கும்......
குற்றம்,குற்றவாளி என்ற சொல்லே
மறந்துபோகும், மறைந்தேபோகும்....
நமக்கு நாமே மெல்ல மெல்ல
உள்ளக் களையெடுக்க
தெள்ளத் தெளிவாகும் எல்லாம்
அன்பே சிவம்......

Thursday, March 10, 2011

மாற்றத்தின் காற்று...

மாற்றம் என்பது
மண்ணின் வளர்ச்சி
மனிதனின் வளர்ச்சி...

உள்மூச்சு,வெளிமூச்சு
வலதுநாசி,இடதுநாசி என்று
காற்றின் மாற்றமே
உயிர்வளம்,உடல்வளம்...

மாற்றத்தின் காற்று
வீறுகொண்டு வீசும்போதெல்லாம்
இயற்கையின் இருப்பு மட்டுமல்ல
மனித இருப்பும்
ஈராக்,எகிப்து,லிபியாயென
மாறிதான் போய்விடுகிறது..

காற்று வீசட்டும்
நம் வீதியெங்கும் வீசட்டும்
நாற்றம் வீசும் அரசியலின்
அக்குளுக்குள் ஒளிந்திருக்கும்
கையூட்டு அசுத்தங்களை
வாய்மை சவுக்காரத்தால்
ஒழித்தொழிப்போம்...

காசு,சாதி என்று
விழலுக்கு நீர் பாச்சாமல்
விழிப்போடு ஓட்டுப்போட்டு
கழனிக்கு நீர் பாச்சுவோம்
அப்போது
மாற்றத்தின் காற்று மனக்கும்...

சனியன்று(05-03-2011)சிங்கப்பூர் கவிச் சோலையில் நடந்த கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்றது..

Monday, March 7, 2011

உணர்வுகொள்...

தோழனே!
உணர்ச்சி வயப்பட்டால் விலங்கு
உணர்வு வயப்பட்டால் மனிதன்
நீ மனிதனாய் இயங்க
அன்பெனும் உணர்வை
ஆழ்மனதின் ஆழத்தில்
ஆணிவேராய் பதித்துக்கொள்..

இயற்கையின் படைப்பில்
எல்லாம் உயர்ந்ததுதான்
எல்லாப் பாதைகளும்
இடம்நோக்கிதான் நகர்கிறது
உன் நகர்தல் காடா?வீடா?..
இன்சொல் இருக்க
வன்சொல் பேசாதே
புல்லுக்கும் உணர்வுண்டு புரிந்துகொள்...

அருகிக்கிடக்கும் அன்பை
உலகமெங்கும் பெருகிக்கிடக்க
உள்ளமெங்கும் உணர்வுகொள்...
சிறுகச் சிறுகச் தொலைந்துகொண்டிருக்கும்
மனிதத்தை..
அன்பெனும் சிறகால்
அடைகாக்க முயற்சி செய்...

மனித உயிரின் எடை
21 கிராம்..
இறந்தால் பயனற்ற நாம்
இருக்கும் வரையிலாவது பயன்தருவோம்
வாசிப்போம்,நேசிப்போம்
உள்ளம் மட்டுமல்ல
உலகும் வளமாகும்...

சனியன்று(26-02-2011)சிங்கப்பூர் கவிமாலையில் நடந்த கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்றது..

மாற்றத்தின் காற்று...

மாற்றம் என்பது
மண்ணின் வளர்ச்சி
மனிதனின் வளர்ச்சி...

உள்மூச்சு,வெளிமூச்சு
வலதுநாசி,இடதுநாசி என்று
காற்றின் மாற்றமே
உயிர்வளம்,உடல்வளம்...

மாற்றத்தின் காற்று
வீறுகொண்டு வீசும்போதெல்லாம்
இயற்கையின் இருப்பு மட்டுமல்ல
மனித இருப்பும்
ஈராக்,எகிப்து,லிபியாயென
மாறிதான் போய்விடுகிறது..

காற்று வீசட்டும்
நம் வீதியெங்கும் வீசட்டும்
நாற்றம் வீசும் அரசியலின்
அக்குளுக்குள் ஒளிந்திருக்கும்
கையூட்டு அசுத்தங்களை
வாய்மை சவுக்காரத்தால்
ஒழித்தொழிப்போம்...

காசு,சாதி என்று
விழலுக்கு நீர் பாச்சாமல்
விழிப்போடு ஓட்டுப்போட்டு
கழனிக்கு நீர் பாச்சுவோம்
அப்போது
மாற்றத்தின் காற்று மனக்கும்...