Friday, March 11, 2011

செந்தமிழ் வாழ்கிற தீவு!.....


அழகிய தீவே!
உழைப்பில் பழகிய தீவே!
பிழைகள் விலகிய தீவே!
அன்பில் இளகிய தீவே!
நீ வந்தாரை வாழவைக்கும் 
வளம் பாயும் ஜீவநதி-உன் 
பாய்ச்சலின் விளைச்சலால் 
அமோக அறுவடை ஆயின 
அநேக தேசங்களில்...!

அண்ணா எமக்குக் கற்பித்ததை 
அலட்சியப்படுத்திவிட்டு 
வாழ்ந்திருந்த எமக்கு
அனுபவ ரீதியாக நீதான் 
கற்பித்தாய் அந்த
கடமை, கண்ணியம், கட்டுப்பாடென்ற
காஞ்சிபுர மந்திரத்தை!..

உழைப்பால் உயர்ந்த 
உன்னதமே-எங்கள்
உழைப்பின் உன்னதத்தையும் 
உணர்ந்தாய்-எமக்கும் 
உணர்த்தினாய்...

அடித்தட்டு மக்களின் 
அன்பிற்கும் -அவர்தம் 
தேவையறிந்து செய்யும் 
சேவைகளுக்கும் அரசியலில்
உலகுக்கே பாடம் நடத்தும் 
உரிமையும் தகுதியும்
உனக்கே உண்டென்பேன்..

இந்த
தீவைச்செதுக்கிய லீஎன்ற 
மாமனிதரின் 
வார்த்தைகள் ஒவ்வொன்றும் 
மந்திரங்களாயின-நாட்டை
மாற்றிக்காட்ட!
எளிமைக்கும் இனிமைக்கும்
இன்னொரு விளக்கமான 
அதிபர் நாதன் என்ற
அதிசய அதிபரின் ஆளுமையை
அடைந்ததே இந்நாட்டின்
அரும்பெரும் பேரேன்பேன்!

நீராதாரமின்றியே நீர் வளம்...
இயற்கைத்தாயே அளித்த வரமாய்
பசுமை வளம்...
மருத்துவமும் சுகாதாரமும் 
வானளாவ விரிந்ததால் காற்றுத்தூய்மை.....
வரம் போல மழைபெய்யும் நீர்வளம்  ... என 
பஞ்சபூதங்கள்கூட பாசமாய்
பணிவிடை செய்யும் இந்த
தேசத்தின் தேவையறிந்து...! 

எத்தனை இனங்களும் 
எத்தனை மொழிகளும் இருந்தாலும்
அத்தனை இனங்களையும்
நரம்போடு தசையாய் பின்னிப்பிணைந்து 
ஒன்றிக்கலந்துப்  போட்டது
ஒற்றுமையென்ற உயிர் மந்திரம்..!

உயர் மந்திரத்தில் மயங்கியும் 
நாட்டின் வனப்பில் கிறங்கியும்
தமிழ் காக்கும் சிங்கைத் 
தீவின் சிறப்பெண்ணி
தலை வணக்கம் செய்கிறேன் 
நாட்டின் நாற்பத்தைந்தாவது 
நல் பிறந்தநாள் திருவிழாவில்... !

வாழ்க,வளர்க நம்சிங்கப்பூர்!
வாழ்வோம்,வளர்வோம் 
நாமும்...

No comments:

Post a Comment