Friday, March 19, 2010

சேலைக்குள் சிக்கியக் காவிப்பறவை...

அகிலமெங்கும் ஆசிரமக் கூடுகட்டி
படிப்பறிவை பக்குவமாய் பாடம்செய்து
ஞானக்குரல் கொடுத்துவந்த காவிப்பறவை
சேலைக்குள் சிக்கிக்கொண்டதால்
ஊடகங்களுக்கு உற்சாகக் கொண்டாட்டம்...


தலைமறைவு,திரைமறைவுப் பேரம்
கால்தொட்டவர்கள் கல்லெறிதல்
கைகும்பிட்டவர்கள் கழியெடுத்தலென
எங்கும் ஏகமாய் பரபரப்பு....


அடுத்தடுத்த தகவலுக்கு மனம்தாவும்போது
ஆசிரமச்செய்தி மெல்லமெல்ல அடங்கும்.
காவிப்பறவை திசையறிந்து குரல்கொடுக்கும்
மீண்டும் கால்தொட்டு கும்பிடுவார்கள்
கோடிகளைக் கொட்டுவார்கள்...


பெரியாரிசம் புத்தியில் பதியாமல்
புத்தகத்தில் இருக்கும்வரை தொடரும்
ஞானக்குரல்களும்,கல்லெறிதலும்....

Saturday, March 13, 2010

செருக்கு..

தமிழ்பேச தமிழ்பேச மொழித்தாகம் தானேயெடுக்கும்
உமிழ்நீர் உமிழ்நீர் தேனாய் இனிக்கும்
எம்மொழி செம்மொழி என்று கதைக்க
ஆரியத்துக்கு காயாய் எட்டிக்காயாய் கசக்கும்...

தினந்தோறும் தினந்தோறும் தீந்தமிழ் தேன்குடிக்க
தினகரனாய் உடலொளிர்ந்து உயிர் தழைக்கும்
மூத்தக்குடி முத்தமிழை முத்தார கவிவடிக்க
செங்குருதி செம்புனலாய் குதித்து கூத்தாடும்...


சொல் ஒன்றாய் பொருள் பலவாய்
சொக்கனைப்போல் எந்தமிழர் நெஞ்சத்தில் நடனமாடி
இணையில்லா இனியகவி கவிமஞ்சத்தில் விளையாடும்
இறைவிரும்பும் இனியத்தமிழறிவோம் என்பதே செருக்கு...

டைனமிக் தன் விழிப்புணர்வு..




டைனமிக் பயிற்சிக்கு வாருங்கள்
உள்ளத் திரையை விலக்கி
உள்ளொளி காண்போம் நம்புங்கள்
காயாய் இருக்கும் உள்ளமும்
கனியாய் மாறும் பாருங்கள்....

வன்சொல்லும் மென்சொல்லாகி
உங்களுக்கே உங்களைப் பிடிக்கும்.
கண்மூடித்தனங்கள் தானே பறக்கும்.
அகத்தின் கண் திறக்கும்.
ஆதவன்போல் முகம் ஓளிரும்.
சாக்குபோக்கு சத்தம்போட்டு ஓடும்.
உந்துசக்தி உள்ளேவந்து மோதும்...

உள்ளத்தின் உணர்வுகரம் கொண்டு
மனதின் மகாகுப்பைகளை அகற்றலாம்..
எங்கோ எதிலோ தொலைத்தவுன்னை
உன்னில் உன்னில் காணலாம்..
வின்னில் உணர்வு கோட்டைக்கட்டி
மண்ணின் வளமுடனே வாழலாம்...

வாருங்கள் டைனமிக்குக்கு வாருங்கள்..