Friday, September 25, 2009

இரவின் நிழல்..

இறந்தகால இரவு ஒன்றில்
நெல்லடிக்கும் களமேட்டில்
கயிற்று கட்டிலில்
வானம் பார்த்து படுத்திருக்க...


சிறுபருவத்தில் சோறுயுட்டிய அம்மாவின்
ஆள்காட்டி விரல்நுனியில் அறிமுகமாகி
அன்றுமுதல் இன்றுவரை ஆச்சரியமூட்டி
நாம் நடக்க நடக்கும் நிலா,
வான்வயலில்
காலம் விதைத்துவிட்ட
ஒளிரும் விதைகள்,
இலைதலை மணத்துடன்
குழந்தையின் மென்பரிசமாய்
வருடிச்செல்லும் தென்றல்,
அழியும் மனிதத்திற்க்காக
எப்போதாவது குரல்கொடுக்கும்
அரசியல்வாதிப்போல் அலறும் ஆந்தை,
புதிய ஜனனத்திற்க்காக
களவி செய்யும் உயிரினங்கள்.
உயிரினங்களின் மென்பேச்சிசை....

இப்படி பலமுறை பலதும்
உள்வாங்கி மயங்கி
இரவின் நிழலில் உறங்கியிருக்கிறேன்
நீங்களும் கூட...

இன்று அடர்ந்த கானகத்தில்
தாய் நடுக்காட்டில் இறந்துகிடக்க
சேய் கருவறைய்ல் சமாதியாகி
உணவும் நீரும் அறிதாகி
அருந்தினாலும் அகால மரணமென்பதால்
உதட்டையும் தொண்டையையும்
உமிழ் நீரால் நனைத்து
உடல்சிதறி உயிர் விலகாமலிருக்க
உருவம் காட்டாமல்
இதய சத்தத்தை மெல்ல மெல்ல அடக்கி
இங்கும் அங்கும் அல்லாடும்
எம் தொப்புள்கொடி உறவுகளின்
உன்னத உயிர்காக்கும் காலம்
இரவின் நிழல் காலம்..











No comments:

Post a Comment